“கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்ற வாண்டில் கிடைத்தது. ஆங்கு நான் கண்டும்கேட்டவைகளில் சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
நீர் நிலவளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை, முதலியனவும் மரவள்ளிக் கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு, வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய்கிறது. இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும், ஆண்களும், பெண்களும் அதி சௌந்திரியமுள்ளவர்கள். நகரங்களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு, விட்டு விலாசமாகவே இருக்கின்றன.
சிக்கனம்
மலையாளிகள் மிகச்சிக்கன முள்ளவர்கள். ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை. ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும். பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை. அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே. தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத் தேவையில்லை. வெந்த பருக்கையை, கஞ்சியைத் திருவலிட்டும் ஆனந்த மாய்க் குடிப்பார்கள்.
உணவிலும், உடுப்பிலும் மட்டும் சிக்கனமல்ல. அவர்கள் பேசும் பேச்சிலும் சிக்கன முடையவர்களே, வார்த்தையை அதிகமாச் செலவழிக்கமாட்டார்கள். பற்பல விஷயங்களையும் கைவிரல் சாடையாலும் கண்களின் மாற்றத்தாலும் முகவாக்கட்டையின் அசைவாலும் ஒருவர்க்கொருவர் அறிவித்துக் கொள்வார்கள்.
சிக்கனம் இவ்வளவுடன் நிற்கவில்லை. கல்யாணத்திலும் அவர்கள் சிக்கனம் காட்டுவார்கள். அண்ணன் தம்பிகள் இரண்டு மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவரைப்போல் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளு கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு மனைவியுடனிருந் தால் சந்ததியும் செலவும் அதிகமாகிவிடுமென வஞ்சி இச்சிக்கன முறையைக் கையாளுகிறார்கள்.
கல்யாணத்திலும் இரண்டு வகையுண்டு. ஒன்று முறைப்படி செய்யப்படும் விவாகம். மற்றொன்று முறையில்லாச்சம்பந்தம். நாயர் பெண்கள் நம்புதிரியென்னும் பிராமணர்களைச் சம்பந்தம் செய்து கொள்வதிலே பெருமை கொள்ளுகிறார்கள். இப்பிராமண வகுப்பாரின் ஜனசங்கை மிகவும் சொற்பம். சம்பந்தம் செய்து கொள்ளும் நாயர்ப் பெண்டீர்களின் சங்கையோ அதிகம். இக்காரணத்தால் ஒவ்வொரு நம்பூதிரிக்கு நாலைந்து பெண்கள் சம்பந்தப்பட வேண்டியதாகிறது.
நம்பூதிரிகள் செய்த பாக்கியமே பாக்கியம். பிறந்தால் கேரளத்தில் நம்பூதிரியாய்ப் பிறக்கவேண்டும். இல்லையேல் இம்மானிடப் பிறவி யெடுப்பதில் சிறப்பில்லை. நம்பூதிரி சாட்சாத்சச்சிதானந்த சொரூபியாய் விளங்குகிறார். அவருக்கு இருக்கும் மதிப்பும், வந்தனைவழிபாடுகளும் வேறெந்தமானிடப்பிறவிக்கும் கிடையாது.
தவம்
முறைப்படி ஒரு கணவனைப் பெற்ற நாயர்ப்பெண்ணும், நம்பூதிரியைக் கலப்பதற்குப்பேராவலுடைய வளாயிருக்கிறாள், மகாபாரதத்திலும், புராணங்களிலும் வருணிக்கப்பட்டுள்ள கிருஷ்ணனைக் காணுவதற்காக கோபிகள் தவஞ்செய்தது போல், நாயர்ப் பெண்களிற் பெரும்பாலர் நம்பூதிரிகளின் சம்பந்தத்துக்காகத் தவஞ்செய்து வருகிறார்கள்.
இம்மோகத்துக்கு நாயர் வகுப்பில்பெண்கள் மட்டுமல்ல பாத்திர மானவர்கள். ஒரு நம்பூதிரி ஒரு நாயரைப்பார்த்து “உன் பெண்சாதி நல்ல அழகுடைய வளாயிருக்கிறாள்; நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டால் நாயருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். தேவனே பிரசன்னமாகி இத்திருவாக்கைப் பகர்ந்ததுபோல் எண்ணுவான். ஓடோடியும் வீடு செல்வான். தன் பெண்சாதியிடம் நம்பூதிரித்தம்பிரானுடைய திருமனசைத் தெரிவிப்பான். அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கோ அளவிராது. உடனே வீட்டை அலகரிப்பாள், விளக்குவாள், பெருக்குவாள். தன்னாபரணாதி களைப் பூட்டிச் சிங்காரித்துக் கொள்வாள். நம்பூதிரித் திருமேனி யுடையவரவை எதிர் நோக்கியிருப்பாள்.
– குடிஅரசு – கட்டுரை – 02.08.1925