Friday 14 April 2023

மணியம்மையார் சட்டப்படியான வாரிசு!

 

பெரியார் பேசுகிறார் : மணியம்மையார் சட்டப்படியான வாரிசு!

மார்ச் 16-31,2022

தந்தை பெரியார்

என்னைத் தலைவனென்று சொல்லிக் கொண்டும், என்னையும் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டும், என்னைச் சுற்றி இருக்கும் தோழர்கள் சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத் தன்மை, அவர்களது தவறை மறைக்கும் தன்மை, அனுசரிப்புத் தன்மை முதலியவைகளைக் காட்டினாலும் அவைகளை அவர்கள் எனது பலவீனம், ஏமாந்த தனம் என்று கருதிக்-கொண்டு இயக்கத்தினுடையவும், என் முயற்சியினுடையவும் பின்விளைவைப்பற்றி நான் பயப்படும் வண்ணமாய்ப் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாக அவர்கள் நடந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் என்னைப்பற்றியும் இயக்கத்தைப் -பற்றியும் இயக்க நடப்பைப் பற்றியும் எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெறவேண்டும் என்பது பற்றியும் ஏதாவது ஒரு வழி செய்யவேண்டியதைப்பற்றி மிகவும் கவலையுடனும் பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாக இருக்கிறேன். இதற்காக என் அனுபவத்தைக் கொண்டு எனக்குத் தோன்றியதை நான் செய்து முடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்,

அக்காரியங்கள் எனது தோழர்களுக்கும் என்னிடம், அன்பும் என் நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்று புரட்சியாகவும் திடுக்கிடக் கூடியதாகவும் இயக்கமே அழிந்து-விடுமோ என்று பயப்படக்-கூடியதாகவும் எனக்கும் ஒரு கெட்ட பேரும் இழிவும் ஏற்படக்கூடிய பெரிய தவறாகவும்கூட காணப்படுவதாகத் தெரிகிறது.

அதைச் செய்ய வேண்டியது எனது அறிவான, யோக்கியமான கடமை என்று உண்மையாகக் கருதிவிட்டேன். இதைப்பற்றிய முழு விவரமும் தெரியாதவர்களும்  நடுவில் அரைகுறையாய் அறிய நேர்ந்தவர்களும் என் செயலைத் தவறாகக் கருதலாம்; ஆத்திரப்-படலாம். எதிரிகள் இதைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு பெரியதொரு கேடு ஏற்பட்டதாகத் துடிதுடிக்கலாம்.

என் பொறுப்பு எனக்குப் பெரிது; அது எனக்குத்  தெரியும். பொதுமக்களுக்காக என்று நான் எடுத்துக் கொண்ட காரியம் அவர்கள் என்னை நம்பி நடந்து கொண்ட தன்மை ஆகியவைகளும் என் ஆயுள்வரையும், கூடுமான அளவு ஆயுளுக்குப் பின்னும் ஒழுங்கானபடி நடக்கும்படியாகப் பார்த்து, என் புத்திக்கு எட்டிய வரை அறிவுடைமையோடு நடந்து கொள்ள வேண்டியது என் கடமையாகும். எனவே, முதலில் எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும் அவசரமுமாகையால், நான் 5, 6 வருட காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும் என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்படி-யாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொண்டு, அந்த உரிமையையும் தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார் 4,5 பேர்களையும் சேர்த்து, இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்டு பத்திரம் – எழுத ஏற்பாடு செய்திருக்-கிறேன். இதில் சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று நமது இஷ்டத்துக்கு விரோதமாக சில சொற்கள் பயன்-படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டதென்றோ, போய்விடுமோ என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மையே ஆகும்.

இயக்கப் பொருள். இயக்கத்துக்காக நான் சேர்த்த பொருள், இயக்கத்துக்காக என்னை நம்பி பலர் அளித்த பொருள், இயக்கத்துக்காக நான் உதவ வேண்டுமென்று கருதி இருக்கிற பொருள் ஆகிய இவைகள் நாதியற்று, இயக்கத்திற்குப் பயன்படாததாக இயக்கமும் பொருளும் தலைவிரிகோலமாகி ஆகிவிடுவ-தோடு, உலகோர் _- என்னைப்பற்றிப் பழி கூறவும் ஏற்பட்டுவிடும்.

ஆதலால், எனது கடமையை உத்தேசித்து, என் மனசாட்சிமீது நம்பிக்கை வைத்து, நான் மிகுந்த யோசனைமீது நல்ல எண்ணத்துடன் இந்தக் காரியம் செய்கிறேன்.

எனது நல்லெண்ணத்தையும் இதன் நற்பலனையும் கூடிய விரைவில் மக்கள் உணர்வார்கள்.

– ஈ.வெ.ரா., (விடுதலை 28.6.1949)

No comments:

Post a Comment