பூமி உருண்டை, தட்டை அல்ல என்று வானவியல் அறிஞர் கோப்பர் நிக்கஸ் கூறியதைத் தொடர்ந்து சூரியனை பூமி சுற்றிவருகிறது என்று கூறி தொலைக்கண்ணாடி போன்ற அரிய கண்டுபிடிப்புகளை மனிதகுலத்துக்குத் தந்தவர் மாமேதை கலிலியோ ஆவார். அதனால் சிறைவாசம், சித்தரவதைக் கொடுமைகளுக்கு அன்றைய கிறிஸ்துவ மதவாதத்தால் அவர் தண்டிக்கப்பட்டது சரித்திர உண்மையாகும். கலிலியோ 1564இல் பிறந்து 1642இல் மறைந்தவர்.
கி.பி.1633ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபை அவரை மிரட்டிப் பணியவைக்க முயற்சித்து, தண்டனை வழங்கியநாள். 359 ஆண்டுகளுக்குப் பின், 1992இல் அதே கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடம், அறிவியலுக்கு முன் மண்டியிட்டு தனது பீடம் தவறு இழைத்ததற்கு மனம் வருந்தி, உலகுக்கு அந்த உண்மையை அப்பட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜியார்டோனா புருனோவை உயிரோடு எரித்தது போல, கலிலியோவை எரிக்கவில்லை; காரணம், அவர் சற்று தனது நிலையிலிருந்து பின்வாங்குவது போன்ற ஒரு சமாதானத்தைச் சொன்னதை ஏற்று அவருக்குள்ள மக்கள் செல்வாக்கையும் கண்டு உண்மையில் அஞ்சி அவரை வீட்டுக்காவலில் வைத்தது.
அவரை எரிக்கவில்லை. 78 வயது வரை (ஆனால், அந்த பாதிப்பு அவர் வாழ்வை மிகவும் துன்பக்கேணியாக ஆக்கியது உண்மை) வாழ்ந்தவர் என்று இன்று ஆறுதல் கொள்ளுகிறார் போப் ஆண்டவர்! கலிலியோவின் அறிவியல் கூற்று பற்றி ஆராய, ஒரு தனிக்கமிஷனை போப் ஏற்பாடு செய்து, இந்த உண்மையை உலகம் அறியச் செய்து ஒப்புக் கொண்டுள்ளார்.
அதற்காக தற்போதுள்ளது போல் அவர்களை அறிவுலகம் பாராட்டவே செய்யும். இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், அறிவியலுக்கு முன்னே மதம் தோற்பது உறுதி என்று பலகாலம் கூறப்பட்டு வந்த உண்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘இந்து’ ஏட்டில் (1.11.1992) வந்த அந்தச் செய்தி, அப்படியே மேலே தரப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளர், விஞ்ஞான மனப்பான்மை நாட்டில் பரவ வேண்டும் என்று விரும்புவோர் அனைவரும் தலைநிமிர்ந்து நின்று மகிழ்ச்சிக்கொண்ட செய்தி இது.