Monday, 26 April 2021

ஆசிரியர் மகள் வீ.கவிதா - நா.மாறன் திருமணம்

எங்கள் இல்லத் திருமணத்தில் என் மகள்வீ.கவிதா - நா.மாறனுக்கு வாழ்த்து கூறும்இரு வீட்டார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்

எங்கள் இல்லத்து திருமணமான எங்கள் மகள் வீ.கவிதாவுக்கும், சிங்கப்பூர் தொழிலதிபரும், சிங்கப்பூர் திராவிடர் கழகப் பிரமுகருமான நாகரத்தினம் அவர்களின் மகன் நா.மாறனுக்கும் வல்லத்தில் 12.11.1995 அன்று பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எளிமையாக குடும்ப நண்பர்கள், இயக்க முக்கியப் பொறுப்பாளர்கள், கேள்வியுற்று கலந்துகொண்ட சான்றோர் பெருமக்கள் ஆகியோரது முன்னிலையில், கழகப் பொருளாளர் மானமிகு கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில், இந்தியன் வங்கியின் தலைவரும் செயல் இயக்குநருமான எம்.கோபாலகிருட்டினன் அவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

எனது இல்லத்து திருமணத்துக்காக தனி அழைப்பிதழ் அச்சிட்டு அனைவரையும் அழைக்கவில்லையே என பல நண்பர்களும் இயக்கத்தவர்களும் வருத்தமுற்றனர். எங்களுக்கு மற்றவர்களை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ நோக்கமல்ல. பெரியார் தொண்டர்களாக வாழும் நாம், அய்யாவின் கொள்கை வயப்பட்டு அதில் சிறிதும் வழுவாது வாழுகிறோம் என்பதை நிலைநாட்டுவதில் சிக்கனம், ஆடம்பரத் தவிர்ப்பு மிகவும் முக்கியம் அல்லவா? ஆகவே அந்த சுயமரியாதைத் திருமணத்தை பெரிய விளம்பரமின்றி நடத்தினோம்.

திருமணத்தைச் சிறப்பாக நடத்த உதவிய மானமிகு ராசகிரி கோ.தங்கராசு, சாமி.நாகராசன், பேராசிரியர்கள் நல்.ராமச்சந்திரன், ராஜசேகரன், புகழேந்தி, சரஸ்வதி, வீகேயென் கண்ணப்பன், கல்வி வள்ளல் பே.தேவசகாயம், வல்லம் திரு.ராமசாமி (உடையார்), மயிலை நா.கிருட்டினன் ஆகியோருக்கு மணவிழாவின்போது எங்களது  நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 1-15.21