“பெரியாரை வடுகர் என்போர் கயவர்” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்!
சிறந்த கவிஞரும், பேச்சாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தமிழ் இன மொழி பண்பாட்டு மேன்மையை மீட்டெடுப்பதற்காகத் தம்வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர். கவிதை சொற்பொழிவு ஆய்வு என மூன்று துறைகளிலும் பொற்பதக்கங்களையும், பொற்கிழிகளையும் பரிசாக பெற்றவர்.
சித்தன்ன வாயல் நூலுக்காக கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றவர். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ராசபாளையம் பெரியார் மையத்தின் ‘பெரியாரியல் சிந்தனையாளர்’ என்ற விருது, தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் ‘தமிழ் தேச புகழொளி’ விருது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘ஆதவன் அயோத்திதாசர்’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
உலக தமிழ் மொழி மெய்யியல், பண்பாட்டு ஆய்வு நிறுவனம் எனும் ஆய்வு மையத்தை நிறுவி தமிழாய்வுப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியராகவும், ஓய்வு பெற்றதற்கு பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்...
பெரியாரின் சமகால தேவை என்னவென்று நினைக்கிறீர்கள்?
முதுகளத்தூர் சாதி கலவரம் நடைபெற்ற போது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டியுங்கள் என்று காமராஜரிடம் நேராக கூறியவர் பெரியார். அவர் அளித்த ஊக்கம் தான் அந்த குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க காரணம். விளைவுகளை கண்டு அஞ்சாத மனத்துணிவு பெரியாரிடம் இருந்தது.
ஒரு காலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே நடைபெற்ற முதுகளத்தூர் கலவரம் போன்ற கலவரங்கள் இன்று தமிழகத்தில் பரவலாக நடைபெறுகிறது. கலப்பு மணத்திற்கான தடை ஆதிக்க கொலைகளாக, சாதிய கொலைகளாக விரிவடைந்து கொண்டே போகின்றன. இதை கண்டிக்கக் கூடிய துணிவு மிக்க தலைவர்கள் இன்றைக்கு இல்லாதது பெரியாரின் தேவையை நமக்கு வற்புறுத்துவதாக உள்ளது.
பெரியார் ‘வடுகர்’ என வைக்கப்படும் வாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அது கயமை. கியூபா புரட்சியில் அர்ஜெண்டைனாவை சேர்ந்த சேகுவாரேவை யாரும் கியூபாவை சேர்ந்தவன் இல்லை என புறக்கணிக்கவில்லை. தந்தை பெரியாரே, “உலகத்தில் உள்ள மற்ற மக்களை போல தமிழர்களும் அறிவும் மானமும் உள்ள மக்களாக மாற வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த பணியை செய்வதற்கு வேறொருவர் வராததால் நான் அதை என் தோள் மேலே போட்டுக்கொண்டு அதே பணியாக உள்ளேன்” என்றார். அப்படி, இந்த இனத்தை மானமும், அறிவும் உள்ள இனமாக மாற்ற முடிந்த ஒரு மனிதனை சாதியால் பார்ப்பதோ, மொழியால் பார்ப்பதோ கயமையின் வடிவம். கயமையின் அடையாளம்.
இப்படிப்பட்ட ஒரு போக்கு, வைணவத்திலும் நடந்தது. 12 ஆழ்வார்களில் நடுநாயகமாக விளங்கக்கூடிய நம்மாழ்வாரின் பாடல்களை இரண்டு காரணங்களால் ஏற்க மறுத்தார்கள், சாதியால் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டிருந்தவர்கள். ஒன்று, நம்மாழ்வார் பிறப்பினால் சூத்திரன் என்பது. இரண்டாவது அவர் பாடியது தமிழ் என்பது. தமிழில் பாடி இருக்கிறான் என்பதால் அவன் பாடல்களை ஏற்கக்கூடாது என்றும், அவன் பிறப்பால் சூத்திரன் எனவே அவனது பாடல்களை ஏற்கக்கூடாது என்ற வாதத்தை முன்வைத்த போது, அதற்கு எதிர்வினைகள் எப்படி நடந்தன என்பது, இங்கே பொருத்தி பார்க்கக்கூடிய ஒன்று.
திருமாலின் உருவத்தை பொன்னினால் செய்ததால் இது உயர்ந்தது என்றும், மரத்தினால் செய்தது, கல்லினால் செய்தது, மண்ணினால் செய்தது என்ற காரணங்களைக்காட்டி இவை எல்லாம் தாழ்ந்தது என்று சொல்வது போல, ஆழ்வார்களுக்கு இடையே சாதி வேறுபாடு பார்ப்பதும் அப்படிதான். “நம்மாழ்வாரை பிறப்பினால் சூத்திரன் என்று சொல்வது பிறந்த தாயின் கற்பை பரிசோதிப்பது போல” என்று மணவாள மாமுனிகள் ‘ஆச்சார்ய இருதயத்தில்’ உரை எழுதுவார். இந்த விடை இங்கும் பொருந்தும்.
இந்திய சமூகத்தின் பிரத்யேக பிரச்சனையாக பார்க்கப்படக் கூடிய சாதியை ஒழித்துவிட முடியுமா? சாதியத்தின் சுவடே இல்லாத காலம் ஒன்று இருந்ததா? குறிப்பாக தமிழக வரலாற்றில்...
ஆமாம். சாதியின் சுவடே இல்லாத காலம் ஒன்று இருந்தது. சங்க கால புலவர்களின் பெயர்களை பார்த்தால், அரசர்களும் இருக்கிறார்கள் பாணர்களும் இருக்கிறார்கள். பாணர்கள் இன்றைய நிலையில் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவு. அரசனின் அந்தபுரத்திற்குச் சென்று, அவனது பள்ளியறைக்குச் சென்று அவனுடைய துயிலை எழுப்பவும், அவனை தூங்கச் செய்யவும் உரிமை பெற்றவர்கள் பாணர்கள் . அப்படிப்பட்ட பாணர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். அன்றைக்கு இந்த நிலை நீடித்திருந்தால் பாணர் குலத்தில் பிறந்த பாணர்களின் பெயரால் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என நூல்கள் வந்திருக்காது.
அண்மையில் ஒரு நூலை படித்தேன். இலங்கை போராட்டக்குழு பெண் போராளி ஒருவர் எழுதிய நூலில், “பெரியாரோ, அம்பேத்கரோ மற்றவர்கள் சாதிக்க முடியாததை யாழ்ப்பாணத்தில் புலிகள் சாதித்திருக்கிறார்கள். சாதி என்பதன் சுவடுகளே இல்லாத சூழல் அங்கு நிலவியது” என்று பதிவு செய்துள்ளார்கள். அந்த விடையையே இக்கேள்விக்கும் விடையாக அளிக்கிறேன்.
இலக்கியங்களின் அடிப்படையில் தமிழர் வரலாற்று தொன்மை எவ்வளவு காலம் செல்லும், தமிழின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதாக நினைக்கிறீர்களா?
ஆமாம். திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. சாலமனின் பாடல்களே சங்க அக இலக்கியத்தின் தாக்கத்தால் வந்தவை என்று ஆப்ரஹாம் மரிய செல்வம் என்ற பாதிரியார் வாடிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டின் வழியே நிறுவியிருக்கிறார். சாலமனின் காலம் கிமு 10ம் நூற்றாண்டு. அந்த காலத்திலேயே எங்கோயுள்ள தமிழோடு நேரடியாக தொடர்பில்லாத மன்னன் தமிழ் இலக்கியங்களை பின்பற்றி பாடல் பாடியிருக்கிறான் என்றால், தமிழ் இலக்கியங்களின் தொன்மை எவ்வளவு காலம் பிந்தையது என்பது நமக்கு புலனாகும். அப்படிப்பட்ட பெருமைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடிய அகழ்வாய்வுகளைக் கூட தடை செய்யக்கூடிய நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழின் வரலாறு ஒன்று இருட்டடிக்கப்படுகிறது, அல்லது திணிக்கப்படுகிறது. இந்த நிலையிலிருந்து நாம் தமிழரின் வரலாற்றையும் மீட்டெடுக்க வேண்டும்.
இந்துத்துவ எழுச்சியைப் போலவே இன்று தமிழ் தேசிய எழுச்சியில் இந்துத்துவ சாயல் உள்ளதாக தோன்றுகிறதே...
அப்படி இருந்தால் அது தமிழ் தேசிய எழுச்சியாக இருக்காது.
நீங்கள் தீவிரமாக செயலாற்றி வரும் புலமான ‘ஆசிவகம்’ குறித்தும், அந்த தத்துவம் பிற தத்துவங்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
என்னுடைய ஆய்வுப் பயணத்தில் ‘ஆசிவகம்’ என்பது ஒரு கட்டம். ஓரளவு அதை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக நான் நம்புகிறேன். சங்க கால தமிழர் சமயமாக இருந்தது ஆசிவகம். அதனை உருவாக்கியவர் இன்று ‘அய்யனார்’ என்று வணங்கப்படும் மாபெரும் மேதை. அய்யனார் மூவர், ஒருவரல்ல. இவர்கள் மூவருமே சங்க புலவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
அறிவுக் கலைக்களஞ்சியம் என்று கருதத்தக்கதாக ‘ஆசிவகம்’ விளங்கியதை அமெரிக்காவை சேர்ந்த இந்தியவியல் அறிஞர் ஹென்ரிக் ஜிம்மர் (Heinrich Robert Zimmer) தனது ‘இந்திய தத்துவவியல்’ (Philosophies of India) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆசிவகம் என்பது அடிப்படையில் அணுக்கொள்கையையும், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் கொள்கையையும், உலக நியதி என்று சொல்லக்கூடிய ஊழியலையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் அறிவுப் பள்ளி.
மக்களை துன்பங்களில் இருந்தும், அதுவும் போர்க்கால சமூக அமைப்பில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து ஆசிவகம் ஆறுதல் தந்தது. துன்பங்களில் இருந்து அவர்களை விடுதலை பெறச் செய்தது. அந்த வகையில் ஆசிவகம் மக்களின் செல்வாக்கிற்கு உரிய சமயமாக மாறியது. ‘துறைமுகத்தில் இருந்து வலைவீசி மீன்களை வாரிக் குவிக்கும் வலையனைப் போல, மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டானே’ என புத்தரே பொறாமைப்படும் வகையில் ஆசிவகத்தின் செல்வாக்கு இந்தியா முழுமையிலும் பரவியது.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் ஆசிவகர்களுக்கு உரிய கோவில்களாக இருந்தவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி ஆசிவகர்களுக்கு உரிய கோவில்களாக இருந்து சைவ கோவில்களாக, வைணவக் கோவில்களாக மாறிய அடையாளங்களை ஒவ்வொரு கோவில்களிலும் காணலாம். எந்தவொரு கோவிலில் சிங்கம் ஒன்று யானையின் பிடறியில் அதனை அடித்துக் கொல்வது போன்று சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளதோ, எந்த கோவிலில் கஜலட்சுமிக்கு தனி கோவில் இருக்கிறதோ அப்படி இருக்கக்கூடிய அத்தனை கோவில்களும் ஆசிவர்களுக்கு உரியவையாக இருந்தவை தான்.
தஞ்சை பெரிய கோவிலைக் கூட ராஜராஜன், ஆசிவகர்களிடம் இருந்து கடுமையான வன்முறையின் வாயிலாக, அதை கைப்பற்றி தான் அந்த கோவிலை கட்டினான் என்பது, ராஜராஜன் கோவிலினுள் சிற்பமாகவும், ராஜராஜன் கருவறையிலே வரைந்துள்ள ஓவியமாகவும் அந்த வரலாறு பதியப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.
எனவே, ஆசிவகம் தமிழரின் சமயமாக, சாதியற்ற, கடவுள் வழிபாடற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்கக்கூடிய சமயமாக விளங்கியது. அதனுடைய அடையாளமாக இன்றைக்கும் தமிழ் மக்களில் பெரும்பான்மையான சமூகத்தவருக்கு அய்யனார் குல தெய்வமாக உள்ளதை வைத்து நாம் உறுதி செய்யலாம். ஆசிவகம் என்பது, தமிழர்களின் வாழ்வியலில் இன்றும் தொடர்ந்துக் கொண்டுள்ளது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.
ஆசிவகத்தின் வரலாறு மறைக்கப்பட்டது ஏன் என நீங்கள் கருதுகிறீர்கள்?
ஆசிவகம் கடுமையான பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கியிருந்தது. கடவுளை மறுத்தது. கடவுளை மறுத்ததால் பக்தி இயக்கத்தின் பரவலுக்கு ஆசிவகம் ஒரு பெரும் தடையாக இருந்தது. மக்களின் மிக தொன்மையான வழிபாட்டு முறைகளான கொற்றவை வழிபாடு மற்றும் முருகர் வழிபாட்டு முறைகளுக்கு ஆசிவகம் மிக சவாலாக இருந்தால், கொற்றவை, முருகரை வழிபட்டுவந்தவர்கள் ஆசிவகத்தை, ஆசிவக துறவிகளை, அதனை பின்பற்றும் மக்களை எதிரிகளாக கருதினர்.
இன்று நடைபெறும் சூரசம்ஹாரம் கூட ஆசிவகத்தை முருக வழிபாட்டினர் வீழ்த்தி அழித்ததன் ஒரு அடையாளமாக கருதும் வாய்ப்பு உண்டு. சங்க இலக்கியத்தில் முருகனை பற்றி குறிப்பிடும் போது, ‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை நெடுவேள்” என அகநானூறு என குறிப்பிடுகிறது. முருக வழிபாட்டினர் ஆசிவக துறவிகளை எப்படி அழித்துக் கொன்றனர் என்பதற்கான சான்றாக இந்த பாடல் நமக்கு கிடைக்கிறது.
முருகனுக்கு உரிய அடையாளங்களாக கூறப்படுபவை அய்யனாரிடம் இருந்து பெறப்பட்டவை தான். திருச்செந்தூர் கோவிலினுள் நுழையும் போதே திருநிலையை நாம் காணலாம். அய்யனார் கோவிலில் இருந்த சிலைகளை அகற்றிவிட்டு அங்கு சிவனின் குறியீடையும், முருகனின் சிலையையும், கொற்றவை சிலையையும் வைப்பது ஒரு மரபாக இருந்திருக்கிறது. அதன் எச்சத்தை, பிள்ளையார் சிலையை திருடிக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்ற இன்றைய நடைமுறையிலும் நாம் காணலாம்.
தமிழகத்தின் பெரும்பான்மையான பழைய கோவில்கள் ஆசிவகத்துடன் தொடர்புடையவை, ஆதிநாதருக்கு உரியவையாக இருந்தவை. இப்படி பல நிலைகளில் ஆசிவக சமயத்தின் அடையாளங்கள் எல்லாம் மாற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன.
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை என்ன?
எந்தவொரு இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கடந்த கால வரலாறு என்பது இன்றியமையாதது. இறந்தகால வரலாறு இல்லாத எந்தவொரு இனத்திற்கும் எதிர்காலம் இல்லை. எனவே தமிழினத்தின் எதிர்கால எழுச்சிக்கு அதன் கடந்த கால வரலாறு இன்றியமையாதது. கிரேக்கத்தின் எழுச்சிக்கு கவிஞர்கள் பாடிய போது அதன் பழைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துதான் கிரேக்கத்தில் புதிய எழுச்சியை உருவாக்கினார்கள் என்பதை உலகம் அறியும். அதேபோல தமிழின் எழுச்சிக்கு, தமிழனின் எழுச்சிக்கு இன்றைய காலக்கட்டத்தில் கடந்தகால வரலாறு மிக மிக அடிப்படையானது.
உலகிற்கு அறிவைக் கொடுத்த இனம் தமிழினம். உலக மொழிகளுக்கு எழுத்தைக் கொடுத்த மொழி தமிழ் மொழி. எனவே அத்தகைய பாரம்பரியம் கொண்ட நாம் நமது கடந்த காலத்தை மறந்துவிட்டால், அல்லது புறக்கணித்தால் நமக்கென ஒரு எதிர்காலம் இருக்கப்போவதில்லை. எனவே நாம் விரும்பக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க, தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது மானமும், அறிவும் உள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை.
நேர்காணல் : கோ பிரின்ஸ்
நாள் : 05-11-2016
( கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். நியூஸ்7 தமிழ் பொறுப்பாகாது )
Fi
COPYRIGHT © 2016 NEWS7 Cts Tamil
#மீள்பதிவு