தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு நீட்: தமிழக அரசுக்கே அதிகாரம் உண்டு
நீதிபதி ஏ.கே. ராஜன் கருத்து
சென்னை, மார்ச் 12 நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று பேட்டியளித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன்.
நீட் தேர்வு விவகாரத்தில், எடப்பாடி அரசு இழுத்தடிப்பதாகவே மாணவர்கள் கருதுகின்றனர். நிரந்தர விலக்கு பெற சட்டப்படி உரிமை இருந்தும் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. தமிழக அரசுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். அவர் பேட்டி: மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 என்பது, கவுன் சிலை மறுசீரமைக்கவும், மருத்துவர்களின் பெயர் களை பதிவு செய்து தொழில் நடத்தையை ஒழுங்கு படுத்தவும் மட்டுமே வகை செய்கிறது. ஆனால், அரசியலமைப்பில் மாநில பட்டியலில் எண் 32ன் படி, பல்கலைக்கழகங்களை நிறுவ, நிர்வகிக்க அதி காரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்க அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட 35, 36 பிரிவுகளின்படி, பல்கலை. மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்ஜிஆர் பல்கலைக் கழகம் இயங்குகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் உத்தரவிட முடியாது. 42ஆவது அரச மைப்பு சட்ட திருத்தன்படி ,கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலில் மாற்றப் பட்டாலும், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப, மருத்துவ கல்வி தொடர்பான சட்டமியற்றும் அதிகா ரத்தை பெற்றுள்ளன. ஆனால், அரசமைப்பு சட்டத்தில், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. பதிவு 25 பட்டியல் 3: பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66 ஆகியவை தெளிவுபடுத்துகின்றன.
* கடந்த 1976ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த நெருக்கடி காலத்தில் 42ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தின் மூலம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 3ஆவது பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதுதான் பதிவு 25. அதற்கு முன்பு, கல்வி என்பது, மாநில உரிமைக்கு உட்பட்டது என 2ஆவது பட்டியலில் பதிவு எண் 11இல் இருந்தது.
* பட்டியல் 1இன் பதிவு 44இல் வணிக நிறுவனங் களைப் பதிவு செய்வது, கட் டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி சட்ட மியற்றும் அதிகாரம் நாடாளு மன்றத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. பட்டியல் 2இன் பதிவு 32இல் பட்டியல் 1இல் குறிப்பிடப்படாத வணிக நிறு வனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் 2இன் பதிவு 44 அய்யும், பட்டியல் 3இன் 32ஆவது பதிவையும் பார்க்கும்போது, பல்கலைக் கழகங்கள் பற்றி சட்டமிற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரம் குறிப்பாக மத்திய அரசுக்கு அளிக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரியும்.
42ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி 2ஆவது பட்டியலில் இருந்து கல்வி 3ஆவது பட்டி யலுக்கு மாற்றபட்டதனால், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் இரண்டுமே தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளன. ஆனால், இந்த பொருள் பற்றி சட்டமியற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதி களுக்கு உட்பட்டதாகும். இதில் பல்கலைக்கழத்தைக் கட்டுப்படுத்தும் அதி காரம் சேர்க்கப்படவில்லை. கூட்டாட்சி முறையில், மாநிலத்துக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.
எனவே தமிழக அரசு, நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துவைத்தால் கண்டிப்பாக, உரி மையை மீண்டும் நிலைநாட்ட முடியும். இவ்வாறு நீதிபதி ராஜன் கூறியுள்ளார்.
இவ்வளவு அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந் தாலும், தமிழக அரசு தயங்குவது ஏன் என்பது மர்மமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் சொல்வதென்ன?
பதிவு 44; - பட்டியல்-1: ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத பல்கலைக் கழகங்கள் நீங்கலான, வணிக நிறுவனங்களை பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது.
பதிவு 32 - பட்டியல் 2: பட்டியல் 1இல் குறிப்பிடப் பட்டுள்ளது நீங்கலாக, மற்ற வணிக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப் படுத்துவது. இந்த இரண்டும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.
பதிவு 25 - பட்டியல் 3: பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதி களுக்கு உட்பட்டு தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பயிற்சி. இது மட்டும் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.
மாநிலங்களுக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் மாணவர் சேர்க்கையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உறுதிப் படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியில் பாடத் திட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் தொழில் நடத்தையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெற்றது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தலையிட முடி யாது. அதற்கு சட்டம் இடம்தரவில்லை. சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிட முயற்சி செய்கிறது.
12.3.17