வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன.
`குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம்.
``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?"
``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச் சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்."
``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’
``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’
```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?"
``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு."
காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.